மும்பை: பெங்களூரில் உள்ள என்சிஏவில் பயிற்சி முகாமில் ஒன்றில் பங்கேற்ற போது சக வீரரான ஆகாஷ் சோப்ராவுக்காக தோனி ஒரு மாதம் அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை ஆகாஷ் சோப்ரா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை, உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்று 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டன் தோனி. அதேபோல் ஐபிஎல் தொடரிலும் 5 முறை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி கைப்பற்றியுள்ளார். 43 வயதாகும் தோனி, 5 ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துவிட்டார்.
இருந்தாலும் ஐபிஎல் தொடரில் மட்டும் தோனி விளையாடி வருகிறார். இதனால் தோனியின் பிராண்ட் மதிப்பு கொஞ்சம் கூட குறையவில்லை. தோனிக்காகவே சிஎஸ்கே போட்டிகளை ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். கேப்டனாக இல்லையென்றாலும், ஃபீல்டிங்கில் தோனி செய்யும் மாற்றங்கள் சிஎஸ்கே அணிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
இதனால் தோனியை அன்-கேப்ட் வீரராக தக்க வைக்க சிஎஸ்கே அணி நிர்வாகம் முயன்று வருகிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடர் தொடங்கிய போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று 5 ஆண்டுகளாகிய வீரர்களை அன்-கேப்ட் வீரராக தக்க வைக்கலாம் என்று விதி இருந்தது. 2022ஆம் ஆண்டு நீக்கப்பட்ட அந்த விதியை, மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதில் சிஎஸ்கே நிர்வாகம் பிடிவாதமாக உள்ளது.
இதனால் பிசிசிஐ நிர்வாகம் என்ன முடிவெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தோனி குறித்து ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். அதில், 2004ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக ஏற்கனவே விளையாடி இருந்தேன். இருந்தாலும் கென்யா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான இந்தியா ஏ அணியின் சுற்றுப்பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்டிருந்தேன்.
இதனால் இந்தியா ஏ அணி வீரர்களுக்கு ஒரு மாதம் பெங்களூரில் பயிற்சி முகாம் நடைபெற்றது. அந்த பயிற்சி முகாமில் தான் தோனியை சந்தித்தேன். பெங்களூரில் எனது ரூம்மேட் தோனி தான். ராஞ்சியில் இருந்து வருவதாக கூறினார். ஆனால் தியோடர் டிராபியில் விளையாடிய போது தோனியை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். ஏனென்றால் அந்த தொடரில் தோனி அதிக ரன்களை குவித்திருந்தார்.
அந்த நேரத்தில் தோனிக்கு அதிக ஃபோன் கால்கள் வரும். எப்போதும் செல்ஃபோனில் யாராவது அழைத்து கொண்டே இருப்பார்கள். ஆனால் தோனி கண்டுகொள்ளவே மாட்டார். அப்போதும் பெரிதாக தோனி செல்ஃபோனில் பேசி பார்த்ததே இல்லை. அதன்பின் அவர் தூங்கும் நேரம் என்ன என்று கேட்டேன். அதற்கு அவர், உங்களுக்கு எப்போது வேண்டுமோ, அப்போது லைட்ஸை ஆஃப் செய்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
அதேபோல் நான் சைவம் தான் சாப்பிடுவேன். ஆனால் தோனியோ அசைவப் பிரியர். நான் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டேன் என்பதால், ஒரு மாதம் எனக்காக சைவ உணவுகளை மட்டுமே தோனி சாப்பிட்டார். அப்போது பாகிஸ்தான் அணியில் இஃப்திகார் அஞ்சும் என்ற பவுலர் இருந்தார். மணிக்கு 140 கிமீ வேகத்தில் வீசக் கூடியவர்.
அவரின் பந்தில் தோனி அபாரமாக ஃபைன் லெக் திசையில் ஒரு பவுண்டரியை விள்ச்ச, மீண்டும் அதே ஓவரில் தேர்ட் மேன் திசையில் ஒரு சிக்சரை அடித்தார். இதனால் தோனியின் பேட்டிங்கை பார்த்த அனைவரும் மிரண்டுவிட்டோம். அப்போதில் இருந்தே தோனிக்கு பெரிதாக வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்யும் பழக்கம் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment