நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுடன் இணைந்து ஜனாதிபதியை நாடாளுமன்றத்தில் இன்று (13.12.2023) சந்தித்து முக்கியமான இரு விடயங்களைப் பற்றி உரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்குறிப்பிட்ட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின்போது மயிலத்தமடு - மாதவனைப் பகுதியில் தொடர்ச்சியாக மாடுகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாகக் கிடைக்கப் பெற்ற புகைப்படங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததுடன் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் பிரதிகளையும் வழங்கினோம்.
அத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் எமது மக்கள் 90 நாளாகவும் போராட்டத்தைத் தொடர்கின்றனர் என்பதைப் பற்றியும் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தோம்.
ஜானாதிபதி கூறிய எந்தவொரு விடயத்தையும் இந்த பிரச்சனைக்கான தீர்வாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெளிவுபடுத்தினோம்.
இரண்டாவதாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்த மாட்டோம் எனக் கூறிக் கொண்டாலும் அந்தச் சட்டத்தின் கீழ் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டோரை இன்றுவரை இனங்கண்டு கைது செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் ஜனாதிபதிக்குக் கூறினோம்.
உடனடியாக இதனை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் வலியுறுத்தினோம். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை ஜனாதிபதிக்கு வழங்கி அவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் கோரினோம்.
தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் எட்டப்படாதவிடத்தும் எதற்காக ஜனாதிபதியைச் சந்திக்கின்றீர்கள்' என மக்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்.
இருப்பினும், எமது விருப்பு - வெறுப்புக்களை துறந்து ஜனாதிபதி, அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோரைச் சந்தித்தும், நீதிமன்றங்களை நாடியும் மக்களுக்கான தீர்வைப் பெறுவதே எமது அயராத முயற்சி என்பதைக் கூறிக் கொள்கின்றேன்.
அத்துடன் மக்களுக்குச் சேவையாற்றவே மக்கள் எம்மைத் தெரிவு செய்துள்ளனர். மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து வாழ்வதற்கு அல்ல" என்றார்.
No comments:
Post a Comment