யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு :காவல்துறை துப்பாக்கிபிரயோகம்: தெல்லிப்பளையில் பதற்றம்!
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளை காவல் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
சிசிரிவி காணொளிகளை கொண்டு வன்முறைக் கும்பலை தேடி காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவு வேளையிலும் தெல்லிப்பழை மற்றும் மல்லாகம் பகுதியில் காவல்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்தோடு, குறித்த வன்முறைச் சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பில்லை என தெரிவித்து ஒருவர் சுன்னாகம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அதேவேளை சம்பவத்தில் தனது காருக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதாக சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மல்லாகம் விசாலாட்சி வித்தியாலயம் அருகில் வீதியில் இருந்து வாள்கள் மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பனவும் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யாழ் - தெல்லிப்பளைப் பகுதியில் வான் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவமானது, தெல்லிப்பழை காவல்நிலையத்திற்கு அருகில்(04/12/2023) மாலை இடம்பெற்றுள்ளது.
அதன்போது அவர்களை பிடிப்பதற்கு காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டும் அவர்கள் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர்கள் வெள்ளை நிற வான் ஒன்றில் வந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் தெல்லிப்பழை பகுதியில் பயணித்த இளைஞர்கள் சிலர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தி விட்டு மருதனார்மடம் நோக்கி தப்பிச்சென்றுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(ஆதிரா)
No comments:
Post a Comment