(செய்தியாளர் ஆதீரன்)
ராஜபக்சக்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பிற்கு விசாரணைக் குழுவினை அமைத்து, டொலர்களை மீட்டெடுக்கும் நடவடிக்கையை முன்னெடுக்காமல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை காப்பாற்றி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று 19 ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
" மேலும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கும், நாடு திவால் நிலைக்கு சென்றமைக்கும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரே காரணமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ராஜபக்சக்களினால் பல்லாயிரம் கோடி டொலர்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி செல்லப்பட்டு பல்வேறு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உள்ளன.
ஆனால் இதுவரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வினால் இது தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கான விசாரணை குழுவொன்று அமைக்கப்படவில்லை.
ஜனாதிபதி, மொட்டுக் கட்சியின் ஆதரவுடன் அதிகாரத்தில் இருப்பதால், விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார் என்பது ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது.
இது தொடர்பான முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடத்தி செல்லப்பட்ட பல்லாயிரம் கோடி டொலர்கள் மீட்கப்பட்டு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தில், பாரியளவிலான முன்னேற்றம் ஏற்படும்" என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment