தென்மேற்கு ஜப்பானில் உள்ள யகுஷிமா தீவில் 6 பேருடன் சென்ற அமெரிக்க ,இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் ஒருவர் இறந்து கிடந்ததாக ஜப்பான் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
ஜப்பானின் NHK ஒளிபரப்பு நிறுவனம், CV-22 Osprey ஹைப்ரிட் விமானம் யாகுஷிமா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றவேளை ஒரு இயந்திரத்தில் தீப்பிடித்ததாகக் கூறியது. எனினும் இதுதொடர்பில் அமெரிக்க தரப்பிலிருந்து கருத்து எதுவும் வெளிவரவில்லை.
இதுதொடர்பாக ஜப்பான் கடலோர காவல் படை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "யமகுச்சி மாகாணத்தில் உள்ள அமெரிக்க மரைன் கார்ப்ஸ் விமான நிலையமான இவாகுனி நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், ஒகினாவாவில் உள்ள கடேனா விமான தளம் நோக்கி சென்றபோது விபத்துக்குள்ளானது.
கடலில் விழுவதற்கு முன்பாக, யாகுஷிமா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கவும் முயற்சி செய்யப்பட்டது" என்றார்.
விபத்து நடந்த இடத்திற்கு ஆறு படகுகள் மற்றும் இரண்டு ஹெலிகொப்டர்களை ஜப்பான் அனுப்பியது. குறித்த இடத்தில் விமானத்தின் சிதைந்த பகுதி மற்றும் உயிர்காப்பு அங்கி போன்றன கண்டுபிடிக்கப்பட்டது.
ஆஸ்ப்ரே விமானம், ஹெலிகொப்டர் போன்று புறப்பட்டு தரையிறங்கக்கூடிய ஹைபிரிட் விமானம் ஆகும். இந்த வகை விமானங்கள் அமெரிக்க ஆயுதப்படைகளின் ஒரு பிரிவான மரைன் கார்ப்ஸ், கடற்படை மற்றும் விமானப்படையில் பயன்படுத்தப்படுகின்றன.
ஆதீரன்
No comments:
Post a Comment