கொழும்பில் உள்ள வறிய குடும்பங்களை இலக்கு வைத்து இடம்பெறும் சிறுநீரக வர்த்தகம் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறியப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 15, மட்டக்குளி பகுதியில் வசிக்கும் நான்கு பேர் தாக்கல் செய்துள்ள முறைப்பாடு நேற்று (28) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுநீரகத்தை யார் யாருக்கு கொடுத்தார்கள், அதற்கான பணப் பரிவர்த்தனைகள் நடந்ததா? என்ற விடயம் தொடர்பில் இதுவரையில் தகவல்கள் வெளியாகவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டவிரோத சிகிச்சைகள்
எனினும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கருத்திற் கொண்டு முறையான விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வருட காலப்பகுதியில் கொழும்பு பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் இவ்வாறான சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்வதற்கும் கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த வருடமும், கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக வர்த்தகம் குறித்த தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் குறித்த வைத்தியசாலையில் மீண்டும் அது தொடர்பான சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment