பாரிய பண மோசடிகள் அதிகரிப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 19 November 2023

பாரிய பண மோசடிகள் அதிகரிப்பு!

 


வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன. 

இது தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களில் மட்டும் இவ்வாறான பண மோசடி தொடர்பான 7 முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அந்த முறைப்பாடுகளின் அடிப்படையில், வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து இரண்டரைக் கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்களே மோசடியில் ஈடுபடுகின்றனர். 

சமூக வலைத்தளங்கள் மற்றும் வட்ஸ் அப் குழுக்களில் காணப்படும் விளம்பரங்களை நம்பியே பெரும்பாலானவர்கள் மோசடியாளர்களிடம் சிக்கியுள்ளனர்.

மோசடியாளர்கள் போலியான விசா ஆவணங்களைக் காட்டி நம்ப வைத்து ஏமாற்றியுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் இங்குள்ள உறவினர்களை அழைக்க முடியும் என்ற நடைமுறையைக் காட்டியும் பல மோசடிகள் நடந்துள்ளன. 

முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் பல்வேறு காரணங்களைத் தெரிவித்து ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பணம் கோரியுள்ளனர். 

இதற்கான பணம் பல தடவைகள் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. 

ஒரு கட்டத்தில் முகவர்கள் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொள்பவர்களின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த மாதம் மட்டும் இவ்வாறான 10 முறைப்பாடுகள் யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவில் பதிவாகியுள்ளன. 

சுமார் 6 கோடி ரூபா வரையில் மோசடி செய்யப்பட்டுள்ளமை இந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு முறைப்பாட்டாளர்களும் பல லட்சங்களை மோசடியாளர்களிடம் இழந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களிலும், குழுக்களிலும் பகிரப்படும் விளம்பரங்கள் தொடர்பாகப் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும், பயண முகவர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொள்பவர்கள் சட்டரீதியாகப் பதிவு செய்யப்பட்டவர்களா என்பதைப் பொதுமக்கள் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் ஜெகத் விஷாந்த தெரிவித்துள்ளார்

(செய்தியாளர் ஆதிரன்)

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here