இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படாவிட்டால், தற்போதைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரட்டியடிக்கப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி எச்சரித்துள்ளது.
தேர்தலை நடத்த முடியாது என ரணில் விக்ரமசிங்க சவால் விடுக்கும் பட்சத்தில் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
அரசியலமைப்புக்கமைய அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு இடம்பெறாத பட்சத்தில் தற்போதைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்ப தமது கட்சி மற்றும் மக்கள் தயாராக இருப்பதாக அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.
மிகவும் வலிமை மிக்கவர் என கூறப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மக்களால் விரட்டியடிக்கப்பட்டதை தாம் சிலருக்கு நினைவூட்ட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்சவை தொடர்ந்து, இலங்கையின் ஆட்சியாளர்களை தெரிவு செய்யும் அதிகாரம் மக்களுக்கு வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக ரணில் விக்ரமசிங்க இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்றதாக அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து, மக்கள் ஆணையற்ற மற்றுமொரு ஆட்சியாளர் அரசியல் சூழ்ச்சிகள் மூலம் நியமிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் மேலும் கூறியுள்ளார்.
ஆதீரன்
No comments:
Post a Comment