அடுத்த ஆண்டுக்குள் தமிழ் மக்களின் இனப்பிரச்னைக்கு தீர்வு காணப்போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார்.
ஆனால், நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தமிழர் பிரச்னை என்று தொடங்கி பின்னர் அதனை வடக்கின் பிரச்னையாக மாத்திரம் வரையறை செய்திருந்தார்.
அவர் சொல்ல வருவது, இனப்பிரச்னைக்கு அரசமைப்பு மூலம் தீர்வு காண்பதற்கு முன்னதாக வடக்கின் அன்றாடப் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்போவதாகக் கூறுவதாக அர்த்தப்படலாம்.
கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், பொருளாதார அபிவிருத்தி போன்ற உடனடி பிரச்னைகளுக்கு தீர்வு காண ரணில் விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.
இதற்காக தமிழ் கட்சிகளுடன் அடுத்தவாரமே பேச்சுக்களை ஆரம்பிக்கப்போவதாகவும் அறிவித்திருக்கிறார்.
இது நடைமுறை சாத்தியமானதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜூலை இருபதாம் திகதி பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்ககளை எடுத்து வருகின்றார்.
பாராளுமன்றத்தில் தனது கட்சி சார்பில் ஒரேயோர் உறுப்பினரை வைத்துக்கொண்டு, தான் நினைத்தவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்துவதில் தொடர்ச்சியாக வெற்றியடைந்துவரும் ஜனாதிபதி, நாட்டின் பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, தான் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரும் எல்லா திட்டங்களையும் அதன் அனுமதியைப் பெறுவதில் வெற்றிபெற்று வருகின்றார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதில் இருந்து பின்னர் இருபத்தியிரண்டாவது அரசமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதுவரை இவற்றைச் சொல்லலாம்.
இருபத்தியிரண்டாவது திருத்தம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, அவருக்கு பாராளுமன்றத்தில் ஆதரவை வழங்கிவரும் பொதுஜன பெரமுன எம்.பிக்களே பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.
ஆனால், கடைசியாக வாக்கெடுப்பு நடைபெற்றபோது எல்லோரும் பெட்டிப்பாம்பாக அடங்கிப்போயிருந்தனர்.
நாடு இன்று இருக்கும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தனது விடயங்களை சாதித்துவரும் ஜனாதிபதி ரணில், கடைசியாக இனப்பிரச்னைக்கான தீர்வையும் கையில் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது.
நாடு பொருளாதார ரீதியில் பலம்பெற வேண்டுமானால் இனப்பிரச்னைக்கு தீர்வுகாணப்பட வேண்டியது அவசியம் என்பதை தமிழர் தரப்பு திரும்பத் திரும்பக் கூறிவருகின்றது.
இதே கருத்திலேயே சர்வதேச சமூகமும் இருப்பதை அவதானிக்க முடிகின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பல்வேறு சர்வதேச தரப்புக்களுடனும் தொடர்ந்து பேசி வருகின்றார்.
அந்தப் பேச்சுக்களின்போதும், அவரை சந்திக்கின்ற- அல்லது அவர் பேசுகின்ற சர்வதேச தரப்புக்களும் இந்த இனப்பிரச்னைக்கு தீர்வுகாணப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவர் என்பது தெரிந்ததே.
அதனால்தானோ என்னவோ அவரும் இப்போது அந்த விவகாரத்துக்கு முடிவுகட்டவேண்டும் என்ற முனைப்பில் இருப்பது தெரிகின்றது.
இதற்கு முன்னர் எடுக்கப்பட்ட முயற்சிகள் எல்லாமே தோல்வியில் முடிந்தது ஏன் என்பது இரகசியமானதல்ல.
ஆளும் கட்சி தீர்வைக் கொண்டுவர விரும்பினால், அதனை எதிர்க்கட்சி எதிர்ப்பதே தொடராக நடந்து வருகின்றது.
அதைவிட மகிந்த ராஜபக்ஷ தரப்பு ஆட்சியில் இருக்கும்போது, அவர்கள் தீர்வைக் கொண்டுவர விரும்பியதில்லை.
அது அவர்களுக்கு வாக்களிக்கும் மக்களின் மனநிலை தொடர்பானது.
கடும் சிங்கள இனவாதத்தை மூலதனமாக்கியே அவர்கள் தேர்தலில் வெற்றிபெறுவதுண்டு.
இந்நிலையில், தமக்கு வாக்களித்த மக்களின் விருப்புக்கு எதிராக செல்ல அவர்கள் விரும்புவதில்லை.
இப்போது ரணில் நினைத்தாலும் தீர்வைக் கொண்டுவரமுடியுமா என்பது விரிவாகப் பார்க்கப்படவேண்டியது.
ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்ட அன்றைய தினமே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஓர் அறிவிப்பை விடுத்திருக்கிறார்.
புதிய அரசமைப்பை நிறைவேற்றுவோம் – அரசியல் தீர்வைப் பெற்றுத்தருவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி தமிழ் மக்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் ஏமாற்ற ரணில் – ராஜபக்ஷ அரசாங்கம் முயற்சிக்கிறது என்றும் மலரவுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி ஆட்சியில் தமிழர்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தாம் தீர்வை வழங்கியே தீருவோம் என்றும் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருக்கிறார்.
இதே சஜித்தான், சில தினங்களுக்கு முன்னர் தன்னை சந்தித்த குழு ஒன்றிடம் பதின்மூன்றுக்கு மேலேயும் போகமாட்டோம் பதின்மூன்றிலிருந்து எதையும் குறைக்கவும் விடமாட்டோம் என்று சூளுரைத்திருந்தார்.
நீங்கள் தமிழர்களின் பிரச்னைக்கு தீர்வை காண தயாராக இருக்கின்றீர்கள் என்றால், ரணிலின் முயற்சிக்கு முழு ஆதரவு வழங்குகின்றோம் என்றலல்லவா அறிவித்திருக்க வேண்டும்.
அவர் தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் என்பதை நீங்களும் அந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கி, அவர் முகத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுவதுதான் புத்திசாலித்தனமான அரசியலாக இருக்கும்.!
No comments:
Post a Comment