டயானா கமகே என்பவர் பாராளுமன்றத்தில் இருப்பதற்கு எவ்விதத்தில் பொறுத்தமற்றவர் என்றும் எனவே அதற்கெதிராக மேன்முறையீட்டு நிதிமன்றில் அடுத்த வாரமளவில் வழக்கு தாக்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஓசல ஹேரத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர பாதுகாவலர்கள் அமைப்பு கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,
பிரித்தானிய பிரஜையான இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, சட்ட ரீதியாக விசா பெற்றுக்கொள்ளாமல் நாட்டில் தங்கியிருந்தமை தொடர்பிலான குற்றச்சாட்டு தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுத்து, டிசெம்பர் 15ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
டயனா கமகே பிரித்தானிய பிரஜை என்று குறிப்பிட்டும் அது தொடர்பில் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு செய்தேன்.
டயானா கமகே பாராளுமன்றத்துக்கு தெரிவாகி இரண்டு, மூன்று மாதங்களிலேயே இந்த விடயம் தெரியவந்தது.
எனவே இந்தத் தகவலுக்கு அமைவாகவும் நான் பெற்றுக்கொண்ட தகவலுக்கு அமைவாகவும் டயானா கமகே என்பவர் பிரித்தானிய பிரஜை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடிந்தது.
இதனை அடிப்படையாக வைத்து நான் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்தேன்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் முழுமையான விசாரணைக்கு அமைவாக, டயானா கமகே என்பவர் இலங்கையில் பிறந்திருந்தாலும் அவர் பிரித்தானிய பிரஜை என்பது உறுதிப்படுத்தப்பட்டு இருந்தது.
இளம் வயதிலேயே பிரித்தானியாவுக்கு சென்ற அவர், அங்கு குடியுரிமையை பெற்றுக்கொண்டதுடன் அந்த நாட்டில் திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன் 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் அவர் இலங்கை;கு வந்துள்ளார்.
பிரித்தானிய நாட்டுக்கு உரித்தான கடவுச்சீட்டை பயன்படுத்தி அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இரண்டு வருட வதிவிட விசாவை பெற்றே அவர் நாட்டுக்கு வந்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஏற்படுத்திக்கொண்ட உடன்படிக்கைக்கு அமைவாக அவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகினார்.
அவர், தான் இலங்கை பிரஜை என்பதை நிருபிப்பதற்காக போலியான ஆவணங்கள் தயாரித்துள்ள விடயமும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே போலி ஆவணங்களை தயாரித்தமை, தான் பிரித்தானிய பிரஜை என்பதை மறைத்தமை என பல குற்றங்களுக்காக தண்டனையை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
அத்துடன், டயானா கமகே என்பவர் பாராளுமன்றத்தில் இருப்பதற்கு எவ்விதத்தில் பொறுத்தமற்றவர். அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதற்கெதிராகவும் நாம் நடவடிக்கை எடுப்போம்; என்றார்.
No comments:
Post a Comment