ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என ஆளுந்தரப்பின் உறுப்பினர்களில் ஒருசிலர் குறிப்பிடுவதை கட்சியின் தீர்மானமாக கருத முடியாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சி, பொதுஜன பெரமுன கூட்டணி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைத்து, தேர்தலில் போட்டியிட உள்ளதாக அரசாங்கத்தின் ஒருசில உறுப்பினர்கள் குறிப்பிடுவது, அவர்களின் தனிப்பட்ட கருத்தே தவிர கட்சியின் நிலைப்பாடு அல்ல.
ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் கட்சி மட்டத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்படவில்லை. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.
ஆதரவு வழங்கியுள்ள காரணத்துக்காக கட்சியின் கொள்கையை விட்டுக் கொடுக்க முடியாது. அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என்பதே கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களின் பிரதான நிலைப்பாடாக உள்ளது.
வெற்றியோ அல்லது தோல்வியோ கட்சியின் தனித்துவத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்பதை கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். தேர்தலுக்கு அஞ்சவேண்டிய தேவை எமக்கு கிடையாது. எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்வோம்.
தேர்தலை பிற்போடாமல் உரிய காலத்தில் நடத்துமாறு கட்சி என்ற ரீதியில் வலியுறுத்தியுள்ளோம். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் பொதுஜன பெரமுன தலையிடுவதில்லை.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் பொதுஜன பெரமுனவிடமே உள்ளது. அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக பல விடயங்களில் விட்டுக்கொடுப்புடன் செயற்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment