நாட்டு மக்கள் இனி ஒருபோதும் மொட்டுக்கு வாக்களிப்பர் என நாங்கள் நினைக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக, அவர்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட நாங்கள் நினைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் அர்ப்பணிப்புடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஜனாதிபதி மேற்கொண்டுவரும் நடவடிக்கையில் நாட்டுக்குள்ளும் சர்வதேச ரீதியிலும் அவர் மீது நம்பிக்கை ஏற்பட்டு வருகின்றது. ஏனெனில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்போது நாடு எதிர்கொண்டிருந்த நிலையை மக்களால் மறக்க முடியாது.
குறிப்பாக, எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு கப்பல் வரும் வரை மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னாலும், சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை நிலையங்களுக்கு முன்னாலும் நாட்கணக்கில் காத்துக் கொண்டிருந்த நாட்களை மக்கள் மறக்கவில்லை.
அதேபோன்று குழந்தைகளின் பால்மா உட்பட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளவும் மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலையே இருந்தது. விவசாயம் செய்ய விவசாயிகளுக்கு உரம் இருக்கவில்லை.
ஆனால், இந்த பிரச்சினைகள் அனைத்தும் முழுமையாக தீர்க்கப்படாவிட்டாலும், மக்கள் நிம்மதியாக செயற்படக்கூடிய வகையில் நிலைமையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் சாதகமான நிலைக்கு வந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் நாட்டில் போராட்டங்களை மேற்கொண்டு, நாட்டை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், ஜனாதிபதியின் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிப்பதே நாட்டை நேசிப்பவர்கள் அனைவரதும் கடமையாக இருக்கின்றது.
மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு வருகின்றது. அதனால் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவாளர்களும் எமது கட்சியின் தலைமையகத்துக்கு வந்து, எம்முடன் கலந்துரையாடி வருகின்றனர்.
அதேபோன்று ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட இணக்கம் தெரிவித்திருக்கின்றனர். அத்துடன் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவிப்பதன் மூலம் இவர்கள் அமைச்சுப் பொறுப்புகளை எதிர்பார்த்து, இவ்வாறு கூறவில்லை.
மாறாக, நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதி மேற்கொண்டுவரும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்கவே முன்வருவதாக தெரிவித்திருக்கின்றனர். அதேவேளை நாடு பொருளாதார நிலையில் ஓரளவு ஸ்திரநிலையை அடையும்போது தேர்தலொன்றுக்கு செல்ல முடியும்.
அப்போது பலரும் எங்களுடன் இணைந்துகொள்வார்கள். ஆனால், நாட்டில் எந்த தேர்தல் இடம்பெற்றாலும், மக்கள் இனி ஒரு போதும் மொட்டு கட்சிக்கு வாக்களிக்கப்போவதில்லை.
நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்தது மொட்டு கட்சியாகும். அதனால் மொட்டு கட்சியுடன் இணைந்து மீண்டும் கஷ்டத்தில் விழுவதற்கு யாரும் விரும்பமாட்டார்கள் என பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment