யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலரால் ஊடகவியலாளர்கள் இருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர்களின் கடமைக்கு இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒஸ்மானியா கல்லூரிக்குள் நேற்றைய தினம் அத்துமீறி நுழைந்த மாணவனின் தந்தை கல்லூரியின் உடற்பயிற்சி ஆசிரியரான து.கௌரிபாலன் என்பவர் மீது தாக்குதல் மேற்கொண்டதில் ஆசிரியர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் அறிந்த இரு ஊடகவியலாளர்கள் செய்தி அறிக்கையிடும் நோக்குடன் கல்லூரிக்கு நேரில் சென்று, தகவல்களைக் கேட்டறிய முற்பட்ட வேளை,பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சிலர், ஊடகவியலாளர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்து, அவர்களின் ஒளிப்பட கருவிகளை பறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.
தமது கல்லூரி தொடர்பில் எந்த செய்தியும் வெளிவர கூடாது என அச்சுறுத்தி ஊடகவியலாளர்களை மடக்கி பாடசாலை வளாகத்தினுள் தடுத்துவைத்திருந்தனர். சம்பவம் தொடர்பில் அறிந்து பாடசாலைக்கு விரைந்த பொலிஸார் ஊடகவியலாளர்களை அவர்களிடம் இருந்து விடுவித்தனர்.
தம்மை அச்சுறுத்தி தமது கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக ஊடகவியாலளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆசிரியர் மீது தாக்குதல் நடாத்திய மாணவனின் தந்தை தற்போது தலைமறைவாகியுள்ளார். கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன்விரும்பிகள் என தம்மை அடையாளப்படுத்தும் நபர்கள் சிலர் குறித்த சம்பவத்தை இன ரீதியான சம்பவமாக திரிபு படுத்தி வருதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.
No comments:
Post a Comment