ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளின் தலைவர்களை அழைக்கவுள்ளாரென குறிப்பிட்டிருக்கின்றார்.
ஜனாதிபதி தெரிவின் போது ஏற்பட்ட குழப்பங்களை தொடர்ந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ரணில் தொடர்பில் இரு வேறு அபிப்பிராயங்கள் காணப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வெளிப்படையாக ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்திருந்தார்.
இந்த நிலையில் சுமந்திரன் மற்றும் அவருக்கு ஆதரவான மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஒருபுறமாகவும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சுமந்திரனுக்கு மாறான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் கூட்டமைப்புக்குள் இரு வேறு நிலைப்பாடுகள் இருந்தன.
இப்போது வரையில் அவ்வாறானதொரு சூழலே காணப்படுகின்றது.
இந்தப் பின்னணியில்தான் ரணில் விக்கிரமசிங்க தமிழ் கட்சிகளின் தலைவர்களுடன் தமிழ் மக்களின் பிரச்னைக்கான தீர்வு தொடர்பில் பேசவுள்ளாரெனத் தெரிவித்திருக்கின்றார்.
தமிழ் கட்சிகள் என்பதில் விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் அடங்குவர்.
தமிழ் கட்சிகளுடன் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்கு ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார் என்று தெரிகின்றது.
இந்த சந்தர்ப்பத்தை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம்? ரணில் – மைத்திரி ஆட்சிக் காலத்தின் புதிய அரசியல் யாப்பு அனுபவங்கள் இருக்கின்றன.
பலமாக இருந்தவேளையிலேயே செய்ய முடியாமல்போன விடயங்களை ரணிலால் இப்போது எவ்வாறு செய்ய முடியும்? எனவே, அரசியல் ரீதியான பிரச்னைகளை படிமுறை சார்ந்து அணுகும் கோரிக்கைகள் தொடர்பிலேயே தமிழ் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.
ரணில் விக்கிரமசிங்க தனது பக்கத்திலுள்ள நெருக்கடிகளைக் கையாளும் நோக்கில் வாக்குறுதிகளை வழங்கலாம்.
ஆனால், தமிழ் கட்சிகள் முன்னைய அனுபவத்திலிருந்தே அனைத்தையும் நோக்க வேண்டும்.
புதிய அரசியல் யாப்பு தேவையென்னும் கோரிக்கையானது சிங்கள மக்கள் மத்தியிலிருந்து வரவில்லை.
அவ்வாறு கோருபவர்கள் பலர் 13ஆவது திருத்தச்சட்டமே தமிழ் மக்களுக்கு அதிகமென்று கருதுபவர்கள்தான்.
இந்தநிலையில் புதிய அரசியல் யாப்பு ஒன்று வரமுடியுமென்றால் அது இருப்பதையும் இல்லாமல் ஆக்கும் நோக்கம் கொண்டதாகவே இருக்க முடியும். அவ்வாறானதோர் அரசியல் யாப்புக்கு மட்டும்தான் சிங்கள – பௌத்த மகா சங்கமும் சிங்கள தேசியவாத சக்திகளும் ஆதரவு வழங்கும்.
எனவே, புதிய அரசியல் யாப்பு தொடர்பில் பேசுவது மேலும் காலத்தை இழுத்தடிக்கப் பயன்படுமே தவிர, ஆக்கபூர்வமான விடயங்கள் எவற்றுக்கும் வழிவகுக்காது.
இந்த நிலையில், தமிழ் கட்சிகளின் தலைவர்கள் என்போர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தால் முதலில் நல்லெண்ண அடிப்படையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துமாறும் ஆளுநர்கள் மாகாண சபைமீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய சூழலை முற்றிலும் இல்லாமல் ஆக்குமாறும் கோர வேண்டும்.
ஒரு புதிய திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம், இதனை சாத்தியப்படுத்த முடியும்.
இதன் பின்னர், சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை நோக்கி நகர முடியும்.
ஒருவேளை சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்கான முயற்சி தோல்வியடைந்தால்கூட, அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.
முன்னைய அனுபவங்களிலிருந்து சிந்திக்கும்போது, இதுவே சாத்தியமான – தந்திரோபாயமான அணுகுமுறையாக இருக்க முடியும்.
அவ்வாறில்லாது, கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புக்களையும் உச்சபட்சமாகத் கையாளத் தவறினால் வெறும் கற்பனைகளிலேயே காலம் நகரும்.
ரணில் – மைத்திரி காலத்தின் அனுபவங்கள் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
அரசியல் யாப்பு முயற்சிகள் தோல்வியடைந்த போது அனைவருமே சாதாரணமாகக் கலைந்துவிட்டனர்.
ஆனால், தமிழ் மக்களின் நிலை?
No comments:
Post a Comment