மீனவர்களின் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்வதற்காக நாளாந்தம் 50 பவுசர்களை அனுப்ப அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான விசேட கடிதம் ஒன்று நேற்று முன்தினம் மாவட்ட செயலாளர்கள், மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் மாகாணக் கூட்டுறவு அமைச்சின் செயலாளர்களுக்கு ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னக்கோனினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் மீனவ மக்களின் தேவைக்காக மண்ணெண்ணெய் ஏற்றிச் செல்லும் 357 பெளசர்களை விடுவிக்க பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அனுமதி வழங்கியிருந்தது.
இருப்பினும், எரிபொருள் நிலையங்கள் 206 பவுசர்களை மாத்திரமே பெற்றுள்ளன.இதற்காக 3.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் மேலதிகமாக செலவிட்டுள்ளது.
இந்த மேலதிக செலவு இருந்தபோதிலும், மீனவ மக்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் உரிய முறையில் வழங்கப்படாததால், மீனவ சமூகம் மீன்பிடி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தென்னக்கோன் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது அரசாங்கத்தின் முக்கியப் பொறுப்பாகக் கருதப்படுகிறது. மேலும் இது ஏராளமான மீன்பிடி மூலம் மக்களின் ஊட்டச்சத்துத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே மீனவர்களுக்கு தேவையான எரிபொருளின் அளவு மற்றும் அதனை பெற்றுக்கொள்ளவேண்டிய பகுதிகளை நிர்ணயிக்கும் பொறுப்பை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் கடற்றொழில் அமைச்சு ஒப்படைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
மாகாண கடற்றொழில் அமைச்சுகள் மற்றும் மாகாண கூட்டுறவு அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்றொழில் திணைக்களம், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் மீனவர்களுக்கு தேவையான மண்ணெண்ணெயை விநியோகிக்கும் பொறுப்பை கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
No comments:
Post a Comment