20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மெல்போர்னில் இன்றைய இறுதிப்போட்டி இடம்பெறவுள்ளது.
8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த மாதம் 16-ந் திகதி ஆரம்பமாகியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் முதல் சுற்று, முடிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா ‘சூப்பர் 12’ சுற்றுடன் வெளியேறியது. முதலாவது அரைஇறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தையும், 2-வது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி இந்தியாவையும் வெற்றிகொண்டு இறுதிபோட்டிக்கு முன்னேறின.
இந்த நிலையில் உலக கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் இன்று நடக்கிறது. இதில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
2009-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. இதேபோல் 2010-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியும் 3-வது முறையாக இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் யார் வெல்வார்கள் என கணிப்பது மிகவும் கடினமாகவே உள்ளது.
மெல்போர்ன் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்தாலும், முதலில் சில ஓவர்களில் பந்து வீச்சை சரியாக சமாளித்து விட்டால் பட்ஸ்மேன்கள் அடித்து ஆடவும் உதவிகரமாக இருக்கும். இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மெல்போர்னில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது. மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மாற்று தினமான ரிசர்வ் டே நாளான நாளை இறுதிப்போட்டி நடைபெறும்.
சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் 28 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 18-ல் இங்கிலாந்தும், 9-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்று இருக்கின்றன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெறும் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று யார் 02 ஆவது முறையாக சம்பியன் பட்டம் வெல்ல போகின்றனர் என எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. போட்டி இலங்கை நேரப்படி மதியம் 01.30 க்கு ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment