2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை இன்று நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளார். இதற்காக இன்று மதியம் 1.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளது.
இந்நிலையில், இது தொடர்பில் நேற்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்த செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நீண்ட கால, நிலையான பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டதாக இருக்கும் இந்த வரவு செலவுத் திட்டம் மூலதன சந்தை, ஏற்றுமதி சந்தை, தொழிலாளர் சந்தை மற்றும் டிஜிற்றல் பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளதுடன், சமூக சந்தைப் பொருளாதாரத்தின் ஊடாக வரவு -செலவுத் திட்ட இலக்குகளை அடைய எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வரவு – செலவுத் திட்டம் சமூக நலன்கள் மிகவும் தேவைப்படும் மக்களுக்கு வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. நாட்டின் பொருளாதாரத்தின் உந்து சக்தியாக தனியார் துறையை கட்டியெழுப்புவதற்கான கொள்கை சூழலை உருவாக்குகிறது.
2023 வரவு – செலவு திட்டத்தின் மூலம், புதிய உலகுக்கு ஏற்றவாறு புதிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் செயல்முறையானது இளைஞர்களுக்கு ஒரு கண்ணியமான நாட்டை உறுதி செய்வதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வரவு – செலவு திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடுமீதான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசெம்பர் 8ஆம் திகதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment