சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டடத் தொழிலாளர்களுக்கு ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அரசாங்கம் வழங்குவதாக உறுதியளித்த 20 பில்லியன் ரூபா இதுவரை வழங்கப்படவில்லை என இலங்கையின் தேசிய நிர்மாண சங்கம் தெரிவித்துள்ளது.
பாரியளவிலான நிர்மாணத் திட்டங்களுக்குச் செலுத்தப்படும் பணத்தில் இருந்து பாரிய நிர்மாணத் துறைகளை நிர்மாணிப்பவர்கள் தவிர்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கட்டடத் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளதாக தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் அரசு மற்றும் கட்டடம் கட்டுபவர்கள் சங்கங்களுக்கு இடையே இடம்பெற்ற கலந்துரையாடலில் ஒக்டோபர் மாதம் 10 ஆயிரம் கோடி ரூபாயும், நவம்பர் மாதம் 10 ஆயிரம் கோடி ரூபாயும் வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இதுவரை பணம் வழங்கப்படவில்லை என்பதுடன், கட்டட நிர்மாணக்காரர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணத் துறைகளின் திட்டங்கள் தொடர்பான தாமதமான கட்டணங்களுக்காக சுமார் 195 பில்லியன் ரூபா அரசாங்கத்திடம் இருந்து அறவிடப்படும் என சுசந்த லியனாரச்சி குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நியாயமான வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment