நாடளாவிய ரீதியில் மீனவர்கள் எதிர் கொண்டுள்ள மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாடுகளில் இருந்து தனியார் துறை மூலம் மண்ணெண்ணெய்யை இறக்குமதி செய்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்தன எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மீனவர்களின் மண்ணெண்ணெய் பிரச்சினையை தீர்ப்பதற்காக கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 5000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது. அந்த வகையில் கையிருப்பில் உள்ள மண்ணெண்ணெய் முடிந்தளவு பகிர்ந்தளிக்கப்பட்டது.
நாட்டில் 27, 903 மீன்பிடி படகுகள் செயல்படுகின்றன. அவற்றுக்கு கடற்றொழில் கூட்டுத்தாபனம் மற்றும் தனியார் துறை மூலம் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது.
94 எரிபொருள் நிலையங்கள் ஊடாக 3 இலட்சம் லீட்டர் மண்ணெண்ணெய் இவ்வாறு வழங்கப்பட்டு வருகிறது. அந்த மண்ணெண்ணெய் எந்த விதத்திலும் போதாது. எனினும் அதனை நிவர்த்திப்பதற்கான நடவடிக்கைகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். அதற்காக நாடளாவிய ரீதியில் மீனவர்கள் எதிர் கொண்டுள்ள மண்ணெண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் வெளிநாடுகளில் இருந்து தனியார் துறை மூலம் மண்ணெண்ணெய்யை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
அது தொடர்பில் வர்த்தக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவ்வாறு இறக்குமதி செய்த பின்னர் மீனவர்களுக்கு போதியளவு மண்ணெண்ணெய்யை வழங்க முடியும் என்றார்.
No comments:
Post a Comment