13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்த்தவர்களே தற்போது அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளது. அதனால் தேர்தலுக்காக போலி தேசியம் பேசிக் கொண்டிருப்பதை விடுத்து தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் மக்கள் நலனுக்காக கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு செயல்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (21) இரண்டாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் நல்லது எதுவும் நடந்துவிடக்கூடாது என்ற கைங்கரியத்துடன் செயல்பட்டு வருபவர்கள் அவ்வாறு செயற்படுவதை விட்டுவிட்டு நல்ல சிந்தனையுடன் எமது மக்களுக்காக தவறுகளை திருத்திக் கொண்டு செயல்பட வேண்டும்.
குறிப்பாக தமிழ் தரப்பு அரசியல்வாதிகள் கிடைத்துள்ள வாய்ப்பை கோட்டை விட்டு விடாமல் 22 ஆவது அரசியலமைப்பு போன்ற நல்லிணக்கம் தொடர்பான குழுவிற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறில்லாமல் போன பஸ்ஸுக்கு கை காட்டுவது போல் தொடர்ந்தும் செயற்படக்கூடாது.
மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ள நிலையில் இந்த நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அதேபோன்று அரசியல் அமைப்பு திருத்தங்கள் மக்களின் அபிலாசைகளை வெற்றி கொள்வதாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்.
தமிழ் மக்களுக்கான அரிய வாய்ப்பே இலங்கை- இந்திய ஒப்பந்தம். அதனையும் மீறி வன்முறை வழியை தொடர்ந்ததால் தான் எமது மக்கள் பேரழிவுகளை சந்திக்க நேர்ந்தது.
பேரழிவுக்கு காரணமானவர்களே இப்போது ஐக்கிய நாடுகளுக்குச் சென்று முறையிடுவதாக கூறிக்கொண்டு வெளிநாடுகளில் சுற்றுலா செல்கின்றனர்.
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் உளுத்துப்போனது என்றவர்கள் இப்போது இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிக் கொண்டிருப்பது விந்தையானது.
நேற்று என்பது உடைந்த பானை, நாளை என்பது மதில் மேல் பூனை. இன்று என்பது மட்டுமே கையில் உள்ள வீணை. நாளை இதை விட அதிக தடைகள் வரலாம்.தேர்தலுக்காக போலி தேசியம் பேசிக் கொண்டிருப்பதை விடுத்து மக்கள் நலனுக்காக கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார்
No comments:
Post a Comment