முல்லைத்தீவு குருந்தூர் மலையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரனை அடையாள அணிவகுப்புக்காக எதிர்வரும் 29.09.2022 வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வாசல் தலத்தில் நேற்று (24.09.2022) முன்னிலைப்படுத்தியபோதே இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பிரதேசத்தில் தமிழ் மக்களினுடைய 632 ஏக்கர் காணிகள் அபகரிப்பு செய்யப்படுகின்றமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி தொல்பொருள் திணைக்களத்தினர் விகாரை கட்டுமான பணியினை தொடர்ச்சியாக நடத்தி வருகின்றமையை எதிர்த்து கடந்த 21 ஆம் திகதி புதன்கிழமை குருந்தூர் மலை பகுதியில் மக்கள் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த போராட்டத்தின் பின்னர் தொல்பொருள் திணைக்களத்தை சார்ந்தவர்கள், தங்களுடைய கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் தங்களை அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டதாகவும் தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தனர்.
இந்த முறைப்பாட்டின்படி சுமார் ஆறு பேருக்கும் மேற்பட்டவர்களுடைய பெயர் விவரங்கள் அடையாளங்கள் உள்ளிட்டவை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட நிலையில் அவர்களில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் ஆகியோர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டனர்.
அங்கு சென்றவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்திய நிலையில் அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment