சோசலிச இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தின் போது 83 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவசர அறிக்கையை கோரியுள்ளது.
இது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமை (26) ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்குமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வைக்கப்பட்டுள்ளவர்களின் உடல் நிலையை கவனிக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு,பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 83 பேரும் இன்று (25) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அவர்களின் வாக்குமூலங்கள் நேற்று இரவு பதிவு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன.
அடக்குமுறைக்கு எதிராக சோசலிச இளைஞர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியின் போது கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு தேரர்கள், 4 பெண்கள் மற்றும் 77 ஆண்கள் அடங்குவர்.
கைது செய்யப்பட்டவர்களில் சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகரவும் அடங்குவார். குறித்த குழுவினர் தற்போது மருதானை மற்றும் கொம்பனித்தெரு பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment